அண்ணாமலை இதற்கு பதில் சொல்லியே ஆகணும் : ரயிலில் ரூ.4 கோடி சிக்கியது குறித்து சீமான் கிடுக்குப்பிடி

சென்னை தாம்பரம் ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைதான் பதில் சொல்ல வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இந்த பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை சீமான் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “ஒரு சொட்டு தண்ணீர் தரமாட்டேன் என சொல்லும் கட்சிக்கு 10 சீட் கொடுத்து தேர்தலை சந்திக்கிறது திமுக. முதன் முதலில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என சட்டசபையில் பேசியவர் கருணாநிதி இவர்களா இசுலாமிய காவலர்கள். ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டியதாக 20 பேர் சுட்டுகொன்றபோது அதிமுக மற்றும் திமுக வேடிக்கை தான் பார்த்தது” என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பணம் பிடிபடுவது தொடரும். நீங்க ஒரு இடத்தில் பிடிச்சுருக்கீங்க.. மற்ற இடங்களில் எல்லாம் காசு கொடுக்கப்படவில்லையா? எல்லா இடத்திலும்தான் காசு கொடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை ஒழுங்கமைக்க வேண்டுமானால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும். தேர்தலில் ஓட்டுக்கு காசு தரமாட்டோம் என்று சொன்னவர் தம்பி அண்ணாமலை. இப்போது அண்ணாமலைதான் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து பதில் சொல்ல வேண்டும். ஆகையால் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் இது குறித்து கேட்டு பதில் சொல்ல வேண்டும்.

நமது முன்னோர்கள் போராடிப் பெற்ற ஜனநாயகம் இப்போது எவ்வளவு கொடுமையான பணநாயகமாக மாறிவிட்டது. இதை ஒழித்து தூய ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும். நாங்கள் காசு கொடுப்பவர்கள் இல்லை. அதனால் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுகிறோம்.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பெண்கள் குறித்து பேசிய பேச்சை அவர்களின் குடும்ப பெண்களே சகித்துக் கொள்ளவார்களா?. ஆனால் கதிர் ஆனந்த் இதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றம் போனால் ஆங்கிலம், இந்தி தெரிய வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார். அப்படி என்றால் தமிழ் ஆட்சி மொழியாகும் எண்ணம் இவர்களுக்கு இல்லையா?. ஊழல் இல்லாத அரசு என கூறும் பாஜக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து 150 கோடி கொடுத்தது அது ஊழல் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.