தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு அச்சுறுத்தல்கள் காரணமாக விஐபிகளுக்கு வழங்கப்படும் ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் அடங்கிய இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய பாதுகாப்பு அமைப்புகள் தயாரித்த அச்சுறுத்தல்கள் தொடர்பான அறிக்கையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தீவிரமான பாதுக்காப்பு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சகம் இந்தப் பணிக்காக 40 – 45 பேர் அடங்கிய குழுவை மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் ஒப்படைத்துள்ளது. இந்த ஆயுதமேந்திய குழுவினர் தலைமைத் தேர்தல் ஆணையர் நாடு முழுவதும் பயணம் செய்யும்போது அவருடன் பயணிப்பர்” என்ற தெரிவித்தனர்.

நாட்டில் ஏப்ரல் 19-ம் முதல் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1984-வது பேட்சை சேர்ந்த ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ராஜீவ் குமார், கடந்த மே 15, 2022-ல் நாட்டின் 25-வது தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவர், 2020-ம் ஆண்டு செப்.1-ம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.