ஆப்கானிஸ்தானை சேர்ந்த 6 மாணவர்கள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் என ஏழு வெளிநாட்டு மாணவர்களை விடுதி அறையைக் காலி செய்யுமாறு குஜராத் பல்கலைக்கழகம் கூறியுள்ளதாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
கடந்த மார்ச் 16ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டது தொடர்பாக இரு பிரிவு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் கம்பியன் பிரதிநிதிகள் பல்கலைக்கழகத்துக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சந்தித்துப் பேசினர். இந்தநிலையில் மாணவர்கள் விடுதியை காலி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தி நிறுவத்திடம் பேசிய குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் நீரஜ் குப்தா, “ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 6 மாணவர்கள், கிழக்கு ஆப்பிக்காவைச் சேர்ந்த ஒருவர் அதிக நாட்கள் இங்கு தங்கியிருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்கள் விடுதி அறையினை காலி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இந்த மாணவர்களின் படிப்பு முடிந்து விட்ட நிலையில், சில நிர்வாக வேலைகள் முடியாத காரணத்தால், முன்னாள் மாணவர்களாக விடுதி அறையில் தங்கி இருந்திருக்கிறார்கள்.
நாங்கள் தேவையான அனைத்து ஆவணப்பணிகளையும் முடித்துவிட்டோம், இப்போது அவர்கள் பாதுகாப்பாக தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பலாம். எங்கள் விடுதியில் எந்த முன்னாள் மாணவர்களும் தங்கி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் சம்மந்தப்பட்ட நாடுகளின் துணை தூதரகத்துக்குத் தெரியப்படுத்தி விட்டோம். அவர்களும் மாணவர்கள் விடுதி அறையை காலி செய்யும்படி உத்தவிட்டுள்ளனர். குஜராத் பல்கலைகழகத்தில் 300க்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் சேர்ந்துள்ளனர்” என்று துணைவேந்தர் தெரித்தார்.
முன்னதாக மார்ச் மாதம் 16ம் தேதி இரவு 10.30 மணியளவில், சுமார் 20-25 பேர் கொண்ட ஒரு கும்பல், பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் வெளிநாட்டு மாணவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். இந்த தாக்குதலில் கற்களும் வீசப்பட்டன. மேலும் மாணவர்களின் அறைகளும் சேதப்படுத்தப்பட்டன. காயமடைந்த இலங்கை, தஜிகிஸ்தானைச் சேர்ந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.