விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவான புகழேந்தி (71) கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 5-ம் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்காக டிஸ்சார்ஜ் ஆகி பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அப்போது குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10.35க்கு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் அஞ்சலிக்காக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டது. புகழேந்தியின் உடலுக்கு இரவு 9.22 மணிக்கு கலைஞர் அறிவாலயத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வெ.கணேசன் உள்ளிட்டோர் உடன் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து விசிக தலைவர் தொல். திருமாவளவனும் புகழேந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை அமைச்சர் துரைமுருகன், எம்பிகள் ஜெகத்ரட்சகன், கவுதமசிகாமணி, முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் எம்பி, பாஜக மாநிலத் துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத், விழுப்புரம் மக்களவைத்தொகுதி வேட்பாளர்கள் ரவிகுமார், முரளி சங்கர், களஞ்சியம், லட்சுமணன் எம்எல்ஏ, உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் புகழேந்தியின் இறுதி ஊர்வலம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. அதே கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் அவரது உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பின்னர் எஸ்ஐ சக்திவேல் தலைமையில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. புகழேந்தி எம்எல்ஏவின் உடலுக்கு அவரின் மகன் செல்வகுமார் மூலம் தீ வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.