நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் பிரதமர் மோடி பின்னால் ஒளிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பா.ஜனதா தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. கச்சத்தீவை யாரும், யாருக்கும் தாரை வார்க்கவில்லை, யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த உடன்பாடு முடிந்து விட்டது. எனவே இந்த பிரச்சினையை எழுப்பக்கூடாது என தகவல் உரிமைச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்போது பிரதமர் மோடிதான் இருந்தார். திடீரென அண்ணாமலை கேள்வி கேட்டவுடன் 7 நாட்களில் பதில் வருகிறது. பதில் தயாரித்து விட்டு கேள்வி கேட்டுள்ளார்கள். இது ஜோடித்த கதை.
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் இந்த பிரச்சினையை எழுப்புவது இலங்கை தமிழர்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய தீங்கு. மீண்டும் முரண்பாட்டை மோதலை ஏற்படுத்தி விடக்கூடாது. தமிழர்கள் என கூறும் இவர்கள் தமிழ்நாட்டில் போட்டி போட வேண்டும். மோடி பின்னால் ஒளிந்து கொண்டு இந்த பிரச்சினையை எழுப்புகின்றனர். 35 லட்சம் தமிழர்களின் நலனின் மீது அக்கறையில்லை அவர்களின் அறிக்கையை கண்டிக்கிறேன், தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினார்.