தனியார் கல்லூரியில் படித்த மாணவிகளை அந்த கல்லூரியின் பேராசிரியர் நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பான வழக்கில் எதிர்வரும் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரியில் பயிலும் மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு ஆடியோவும் வெளியானது. அதில் நிர்மலா தேவி, மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியிருந்தது பதிவாகியிருந்தது.
அந்த போன் அழைப்பு ஆடியோவில், மாணவிகளிடம் ஆசையைத் தூண்டி பேசிய நிர்மலா தேவி, அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் குறித்தும் பேசினார். இந்த விவகாரம் அப்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய பூதாகரமானது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.
நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாக கூறி பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் தமிழக காவல் துறை கைது செய்தது. அருப்புக்கோட்டை போலீஸார் இந்த வழக்கை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பதாக பேராசிரியர் முருகன் அப்போது குற்றம் சாட்டினார்.
இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் எதிர்வரும் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.