2008 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை பெற்றவர் விஜயேந்தர் சிங். இவர், 2006 மற்றும் 2014ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும், 2009 மற்றும் 2010ல் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களையும் வென்றார். தொடர்ந்து தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாறினார்.
அர்ஜூனா, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற விஜயேந்தர் சிங், ஹரியாணாவின் பிவானியை சேர்ந்தவர். இவர், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியாணாவை ஒட்டியுள்ள தென் டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனிடையே, தற்போது நடக்கவுள்ள மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டது.
இந்தநிலையில், எதிர்பாராத ட்விஸ்டாக காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார் விஜயேந்தர் சிங். டெல்லியில் இன்று நடந்த விழாவில், பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியில் சீட் மறுக்கப்பட்டதால் தற்போது பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இணைந்தது தொடர்பாக பேசியுள்ள விஜயேந்தர் சிங், “நான் 2019 தேர்தலில் போட்டியிட்டேன். விளையாட்டு வீரர்களுக்கு தற்போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மரியாதை கிடைத்து வரும் விதம் பாராட்டுக்குரியது. நாங்கள் முன்பு போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும். ஆனால் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் எங்கு வேண்டுமானாலும் எளிதாகச் செல்ல முடிகிறது.
இந்த அரசாங்கத்தால் தற்போது விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்து வரும் மரியாதைக்காக பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், இந்த அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்து, மக்களுக்கு உதவவும், அவர்களுக்கு சரியான பாதையை காட்டவும் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.