தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுக்கும் சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு, மாணவர்களிடையே மோதல் போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. குறிப்பாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள அரசு பள்ளியில், பள்ளி மாணவர் மீது சக பள்ளி மாணவர்களே தாக்குதல் நடத்திய விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அரசின் நேரடி மேற்பார்வையில் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்காக ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் உருவாகும் வன்முறைகளை தவிர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்களையும் கேட்டுள்ளது. இந்த குழுவின் பதவிக்காலம் பிப்ரவரி மாதத்தோடு முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நீதியரசர் சந்துருவின் பதவிக்காலம் மே 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் அறிக்கை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.