தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் : எல்.முருகன் கடும் தாக்கு

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய மந்திரியுமான எல்.முருகன், இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.

தொடர்ந்து அந்த பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு மக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:- பிரதமர் மோடி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம். வீட்டுக்கு வீடு கியாஸ் இணைப்பு திட்டம் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வந்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு முறையாக செயல்படுத்தவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுவிடும். இது தி.மு.க.வின் சாபக்கேடு. மேட்டுப்பாளையம் மக்களின் உயிர்நாடியாக கருதப்படும் பவானி ஆறு தற்போது வறண்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் குப்பைகளாகவே உள்ளது. சுகாதாரம் என்றால் என்ன விலை எனக் கேட்பார்கள் போல. மேட்டுப்பாளையம் நகராட்சி முழுவதுமே சுத்தம் இன்றி காணப்படுகிறது.

மேட்டுப்பாளையம் மக்கள் தேசியத்தையும் தெய்வீகத்தையும் ஒன்றாகப் பார்ப்பவர்கள். இது சாதாரண ஊர் இல்லை, தியாகபூமி, ரத்தம் சிந்திய பூமி. மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டுவர நெடுஞ்சாலை அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தி.மு.க. ஆட்சியில் பெண்களை மிகவும் தரக்குறைவாக தான் பேசுவார்கள். நடத்துவார்கள். மேட்டுப்பாளையத்தில் தாமரை மலர்ந்தே தீர வேண்டும் என்று கூறினார்.