நேரடி அரசியலில் டிடிவி.தினகரன் மனைவி அனுராதா : தேனி தொகுதியில் சூறாவளி பிரச்சாரம்

கணவர் டிடிவி.தினகரனுக்காக அவரது மனைவி அனுராதா தேனி மக்களவைத் தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சசிகலாவுடன் கைகோத்த அனுராதாவின் திரைமறைவு அரசியல் தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதுண்டு. கிச்சன் கேபினெட் என்ற பெயரில் சசிகலா – அனுராதா உள்ளிட்டோர், ஜெயலலிதா எடுக்கும் அரசியல் முடிவுகளை அதிகம் தீர்மானிப்பதாகவும் சொல்லப்பட்டது.

இது தவிர அனுராதா ஜெயா டிவிக்கு பொறுப்பெற்று இருந்தார். ஆனால் எந்த வகையிலும் நேரடி அரசியலில் அவர் ஈடுபடவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் சசிகலா, தினகரன் ஆகியோர் கழற்றிவிடப்பட்ட பிறகு அமமுக தனி இயக்கமாக தோன்றியது.

அதிலும் அனுராதாவின் கிச்சன் கேபினட் தலையீடுகள் தொடர்பாக புகார்கள் இருந்தன. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் விலகியவர்களில் வழக்கறிஞர் சிவசங்கரி போன்றோர் அனுராதாவுக்கு எதிராக புகார் தெரிவித்ததுண்டு.

ஆனபோதும் வெளிப்படையாக நேரடி அரசியலில் இடம்பெறுவதை அனுராதா தினகரன் தவிர்த்தே வந்தார். இந்த சூழலில், கணவர் டிடிவி.தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதைத் தொடர்ந்து அங்கே சூறாவளிப் பிரச்சாரத்தில் அனுராதா குதித்திருக்கிறார்.

தினகரனின் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு போடி, கம்பம் பகுதிகளில் அனுராதா பிரச்சாரம் செய்து வருகிறார். அனுராதாவின் நேரடி அரசியல் பிரச்சாரம், அங்கு பெண் வாக்காளர்களை அதிகம் கவரும் என்றும் அமமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி கொள்கின்றனர். மேலும் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனுராதா களமிறங்க இருப்பதாகவும், அதற்கான ஒத்திகையாகவும் அவரது தேனி தேர்தல் பிரச்சாரம் அமைந்துள்ளதாகவும் அமமுகவினர் தெரிவிக்கின்றனர்.