அந்நியச் செலாவணி வழக்கு தொடர்பாக மூன்றாவது முறையாக அமலாக்கத் துறை சம்மனை  நிராகரித்த மஹுவா மொய்த்ரா

அந்நியச் செலாவணி சட்டத்தை மீறிய வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை மஹுவா மொய்த்ரா நிராகரித்துள்ளார். மேலும் அவர் தான் போட்டியிடும் கிருஷ்ணாநகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிருஷ்ணாநகர் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக இன்று மதியம் செல்ல உள்ளேன்” என்றார். அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாக மொய்த்ரா மீது வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

முன்னதாக இந்த வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் எம்.பி., மஹுவாவுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பி இருந்தது. அவைகளை அவர் நிராகரித்திருந்தார். மஹுவாவிடம், என்ஆர்ஐ வங்கிக் கணக்கு மற்றும் வெளிநாட்டில் இருந்து பெற்ற ரொக்கப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது. இதனிடையே தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று மஹுவா தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக இருந்த மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராககேள்வி கேட்க, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் அவர் லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக நடந்த விசாரணைக்குப் பிறகு மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையே, இவர் மீதான புகார் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை மத்திய புலனாய்வுத்துறை மஹுவாவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட மொய்த்ராவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.