ஜார்க்கண்டில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து : 15 குழந்தைகள் படுகாயம்

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இன்று காலை தனியார் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்திற்குள்ளானதில் 15 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

ராஞ்சியில் உள்ள மந்தரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை இப்பள்ளி பேருந்து 30 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பள்ளியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள வளைவில் பேருந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காயமடைந்த ஒரு மாணவருக்கு மட்டும் தலையில் பலத்த அடிபட்டதால் அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அனைத்து மாணவர்களும் நலமுடன் இருப்பதாகவும் மந்தர் காவல் நிலைய ஆய்வாளர் ராகுல் குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குழந்தைகளின் பெற்றோர், சம்பவ இடத்திலும், மருத்துவமனையிலும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காயமடைந்த மாணவர் ஒருவரின் பெற்றோர் கூறுகையில், “பள்ளி பேருந்து 45 நிமிடம் தாமதமாக வந்தது. இதனால் ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்றார்.

மேலும், அவர் செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது” என்றனர். இந்த விபத்து குறித்து மந்தர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ராஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.