“சிவகங்கையை ப.சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து மக்கள் மீட்க வேண்டும்” – ஹெச்.ராஜா

ப.சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து சிவகங்கையை மீட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கையில் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கார்த்தி சிதம்பரம் மீது சீனாவுக்கு விசா வாங்கி கொடுத்ததில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை வழக்கு பதிந்துள்ளது. அதை பற்றியோ, தந்தை, மகன் திகார் சிறையில் இருந்தது பற்றியோ கேட்டிருந்தால் பதில் சொல்லியிருப்பார். அதைவிட்டுவிட்டு சிவகங்கை தொகுதியை பற்றி கேட்டதால் முன்னாள் எம்பி செந்தில்நாதனை கேளுங்கள் என்று சொல்கிறார்.

தந்தை, மகன் தொகுதியை பற்றி சிந்திக்காதவர்கள். பாஜக வேட்பாளர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என கார்த்தி சிதம்பரம் கூறுவது அகம்பாவத்தின் உச்சம். ப.சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து சிவகங்கையை மக்கள் மீட்க வேண்டும். எய்ம்ஸ் தாமதத்துக்கு திராவிட அரசுகள் தான் காரணம். தற்போது வேலையை தொடங்கிவிட்டனர். இனி உதயநிதி வைத்திருக்கும் செங்கல் மண்ணோடு போகிவிடும். ஊழலை எதிர்க்கிறேன் என்று தான் கமல் கட்சி ஆரம்பித்தார். தற்போது ஊழல் கட்சியோடு சேர்ந்ததால், அவரது கட்சியினர் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பாஜக வேட்பாளர் தேவநாதன் கூறியதாவது: சிவகங்கை தொகுதியில் 40 ஆண்டுகளாக பிரபலமான பிரதிநிதிகள் இருந்தும், ஒரு தொழிற்சாலைகூட கொண்டு வரவில்லை. இதனால் 40 சதவீத இளைஞர்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். நான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் தொழிற்சாலைகளை கொண்டு வருவேன் என்று கூறினார்.