குன்னூரில் தேர்தல் பறக்கும் படையினர் சுற்றுலா வந்த வடமாநில பெண்ணிடம் இருந்து பணம் பறிமுதல் : கதறியழுத இளம்பெண்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சுற்றுலா வந்த வடமாநில பெண்ணிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ததால் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை டபுள் ரோடு பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழு தங்களது குழந்தைகளுடன் விமான நிலையத்திலிருந்து இருந்து வாடகை கார் ஒன்றில் நீலகிரிக்கு வந்தனர். அப்போது அவர்கள் வந்த காரை நிறுத்தி, பறக்கும் படையினர் சோதனை இட்டதில் அவர்களிடம் ரூபாய் 69400 இருந்த நிலையில், அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்மணி, ‘நாங்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து விமான மூலம் கோவை வந்து கோவையில் இருந்து வாடகை காரில் ஊட்டிக்கு இன்ப சுற்றுலா வந்தோம். எங்களுக்கு, இவ்வளவு பணம் கையில் கொண்டு வரக்கூடாது என்று தெரியாது. எங்களது பணத்தை திரும்பத் தாருங்கள்’ என அப்பெண்மணி கதறி அழுதார்.

இதில் தேர்தல் பறக்கும் படையில் உள்ள குழுவினருக்கு ஹிந்தி தெரியவில்லை என்பதாலும், சுற்றுலா வந்தவர்களுக்கு ஹிந்தியை தவிர வேறு மொழி தெரியாது என்ற நிலையில் இருதரப்பினரும் செய்வதறியாது குழம்பினர். பின்னர் சுற்றுலா வந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினரிடம், தேர்தல் காலங்களில் இதுபோல் ஆவணமின்றி, பணத்தை எடுத்துவரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தேர்தல் பறக்கும் படையினர், கட்சியினர் கொண்டு வரும் பணத்தை பிடிக்காமல், சிறு குறு வியாபாரிகளின் பணத்தையும், இன்ப சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் மருத்துவ செலவிற்காக எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க அறிவுறுத்த வேண்டுமென்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.