வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு பெருமான் வனாந்தரத்தில் நோன்பிருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பர். இந்த காலத்தை தவக்காலம் என்று அழைக்கின்றனர். 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து தங்களுக்கு பிடித்த காரியங்களை தவிர்த்து ஆண்டவரை தியானிப்பர். உண்ணும் உணவு, உடை போன்ற அலங்காரங்களை தவிர்த்து பிறருக்கு உதவிகளை செய்வர். தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதனாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தாண்டு சாம்பல் புதன் கடந்த பிப்ரவரி 14ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் பேராலயங்களில் நடந்த சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, திருநீறு பூசி விரதத்தை துவக்கினர். ஈஸ்டர் பண்டிகையுடன் தவக்காலம் நிறைவடையும். ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிறு, குருத்தோலை ஞாயிறு ஆகும். அதன்படி இன்று குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இன்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்கு தந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இதைதொடர்ந்து ஞாயிறு குருத்தோலை பவனி நடந்தது. குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு ஆலய வளாகத்தில் பவனியாக சென்றனர். பின்னர் வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடந்தது.
அதேபோல் திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். வரும் 28 தேதி புனித வியாழன், 29ம் தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகை 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.