‘சூர்யவம்சம்’ படத்தில் தேவயானியை கலெக்டர் ஆக்கியதை போல் ராதிகாவை எம்.பியாக ஆக்குவேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
கோடை வெயிலை விட தேர்தல் பிரசார அனல் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
பாஜகவுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் சமகவை பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அதிரடியாக அறிவித்தார். மூன்றாவது முறை மோடியை பிரதமராக்குவதே லட்சியம் என்று அவர் சூளுரைத்துள்ளார். சரத்குமாருக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சரத்குமார் மனைவியான நடிகை ராதிகா போட்டியிடுகிறார்.
விருதுநகர் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை நடிகை ராதிகா இன்று தொடங்கினார். இதற்காக மதுரை திருப்பரங்குன்றத்தில் வழிபாடு நடத்தினார். அப்போது ராதிகா செய்தியாளர்களிடம் கூறுகையில்,” பிரதமர் நரேந்திர மோடியால், நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறார். ஆனால், எந்த திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை. எனவே, இந்த பகுதி மக்களுக்கு அடிப்படை தேவையான உண்ண உணவு, குடிநீர், இருக்க இருப்பிடம் ஆகியவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனக்கு அரசியல் புதிதல்ல” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சரத்குமாரிடம், மக்களவைத் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், ராதிகாவிற்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் ஒன்றுதான், ராதிகாவிற்கு வாய்ப்பு கொடுத்தாலும் ஒன்றுதான். மகளிர் சக்திக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
எப்படி ‘சூர்யவம்சம்’ படத்தில் படிக்காதவனாகிய நான் தேவையானியை கலெக்டர் ஆக்குவேனோ, அதேபோல ராதிகாவை வெற்றி பெற வைத்து எம். பியாக ஆக்குவதற்காக வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கெனவே 30 நாட்கள் இந்த விருதுநகரை பற்றி மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளையும் ராதிகா நன்றாக படித்துள்ளார்.
எனவே, இந்த தொகுதியை பற்றி நான்கு அறிந்துள்ளார். காமராஜரை போன்று பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி புரிந்து வருகிறார். அந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும். மத்திய அரசு திட்டம் கொண்டு வந்தாலும் அதனை மாற்றி மாநில அரசின் திட்டமாக இங்கே செயல்படுத்தி வருகிறார்கள். அந்த பிரம்மையை உடைக்க வேண்டும்” என்றார்.