நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா கூட்டணியில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

கோலார் தொகுதியை ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு பா.ஜனதா விட்டு கொடுத்துள்ளது.

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 26-ந் தேதி மற்றும் மே மாதம் 7-ந் தேதி என 2 கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு ஹாசன், மண்டியா, கோலார் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே தேவேகவுடாவின் மருமகனான டாக்டர் மஞ்சுநாத் பா.ஜனதா சார்பில் பெங்களூரு புறநகரில் போட்டியிடுகிறார்.

இதனை வைத்து பா.ஜனதா மேலிடம் கோலார் தொகுதியை ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு கொடுக்காமல் தங்கள் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் ஜனதாதளம் (எஸ்) கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பா.ஜனதா தலைவர்கள் மீது குமாரசாமி அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது.

அத்துடன் கூட்டணியில் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சி தொண்டர்கள் இன்னும் இணைந்து செயல்படாமல் இருந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதனால் கூட்டணிக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் பா.ஜனதா தலைவர்கள் குமாரசாமியை சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து கோலார் தொகுதியை ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு பா.ஜனதா விட்டு கொடுத்துள்ளது. மேலும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து பா.ஜனதா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பா.ஜனதா கூட்டணியில் மண்டியா, கோலார், ஹாசன் ஆகிய 3 தொகுதிகளில் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது,