“நான் கைது செய்யப்பட்டதற்காக பாஜகவினரை வெறுக்காதீர்கள்” – தொண்டர்களுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள்

“நான் கைது செய்யப்பட்டதற்காக பாஜகவினரை வெறுக்காதீர்கள்” என ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்களுக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தை தான் வாசிப்பதாக கூறி வாசித்துக் காட்டியுள்ளார். அதில், கேஜ்ரிவால் தெரிவித்திருப்பதாவது: “நான் சிறைக்குள் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் நாட்டுக்காகவே சேவை செய்வேன். நான் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளேன். தொடர்ந்து இயக்கங்களை முன்னெடுப்பேன். எனவே இந்த கைது என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை.

இந்தியாவை உலகின் நம்பர் ஒன் நாடாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவில் பல உள் மற்றும் வெளி சக்திகள் நமது நாட்டை பலவீனப்படுத்த முயல்கின்றன. இந்த சக்திகளை கண்டறிந்து தோற்கடிக்க வேண்டும்.

டெல்லியில் உள்ள தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை எனது அரசு தொடங்கியது (இந்த ஆண்டு பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட புதிய திட்டம்). நான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கு ரூ. 1,000 கிடைக்குமா? என அவர்கள் சந்தேகம் கொள்ளக்கூடும். என் மீது நம்பிக்கை வைக்குமாறு நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். நான் விரைவில் வெளியே வருவேன்.

நான் எப்போதாவது வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாமல் இருந்திருக்கிறேனா? உங்களின் மகனாகவும், சகோதரனாகவும் இருக்கும் நான் இரும்பினால் செய்யப்பட்டவன். நான் மிகவும் வலிமையானவன். உங்களிடம் முன்வைக்க எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் இருக்கிறது. கோயிலுக்குச் சென்று எனக்காக கடவுளின் ஆசிர்வாதத்தைக் கோருங்கள்.

இந்த தருணத்தில், ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னை கைது செய்திருப்பதால், நீங்கள் பாஜகவினரை வெறுக்காதீர்கள். அவர்களும் நமது சகோதரர்கள்தான்.” என்று கேஜ்ரிவால் கூறி இருக்கிறார்.