டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலை இன்று ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் நேற்று சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இரவு 9 மணி அளவில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் 11 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தொடந்த வழக்கை நள்ளிரவில் விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவசர வழக்காக நள்ளிரவே விசாரிக்க வேண்டுமென்ற ஆம் ஆத்மியின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம். அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய ஆம் ஆத்மி மனுவை இன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து அவரது வீட்டைச் சுற்றி டெல்லி போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. கெஜ்ரிவாலை கைதை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகம் அருகே உள்ள டெல்லி மெட்ரோ நிலையம் மூடப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் கூடியுள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் அமலாக்கத்துறைக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. போராட்டம் நடத்த இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் டெல்லியில் கூடுதல் படைகளை மத்திய அரசு குவித்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் இரண்டு எதிர்க்கட்சி முதலமைச்சர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. நிலக்கரி சுரங்க வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். 2 மாதங்களில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படும் 2-வது எதிர்க்கட்சி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆவார்.