மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.
தேமுதிக வேட்பாளர் பட்டியலில், திருவள்ளூர் (தனி) – கு.நல்லதம்பி, மத்திய சென்னை – ப.பார்த்தசாரதி, கடலூர் – சிவக்கொழுந்து, தஞ்சாவூர் – சிவநேசன், விருதுநகர் – விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்கள்.
தேமுதிகவின் வேட்பாளர்கள் ஐந்து பேரில் மூன்று பேர் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆவர். திருவள்ளூர் (தனி) வேட்பாளர் கு.நல்லதம்பி, மத்திய சென்னை வேட்பாளர் ப.பார்த்தசாரதி, கடலூர் வேட்பாளர் சிவக்கொழுந்து ஆகிய மூவரும் முன்னாள் எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவை திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வேட்பாளர்கள் நேர்காணல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அக்கட்சியினருக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்பதாலும், விஜயகாந்த்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வருவதாலும், விருதுநகர் தொகுதியை தேமுதிக கேட்டு வாங்கியது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பங்குன்றம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர், அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழிதேவன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் 4,70,883 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வெற்றி பெற்றார். அவரை அடுத்து 3,16,329 வாக்குகள் பெற்று தேமுதிக வேட்பார் அழகர்சாமி 2-ம் இடத்தைப் பெற்றார். இந்நிலையில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் இம்முறை அதிமுகவுடன் கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் களமிறங்க விருப்பம் தெரிவித்து விஜய பிரபாகர் விருப்ப மனு கொடுத்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே விஜய பிரபாகர் அரசியலுக்கு வந்தாலும் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை ஆகும். ஏற்கனவே விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூரும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் விஜய பிரபாகரும் களமிறங்கி இருப்பதால் விருதுநகர் தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது.