பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார்.

சென்னை அசோக் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் திருமாவளவன் கூறியதாவது:- 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டின் வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. பாஜக ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சிறு குறு தொழில் வளர்ச்சி சரிவு கண்டுள்ளது. நாடு முழுவதும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.

சிதம்பரம் தொகுதியில் 6-வது முறையாக திருமாவளவன் போட்டியிடுகிறார். கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் 3,02,019 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றிருந்தார். கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார் 1,28,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.