தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்ததையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்தநிலையில், நேற்று அவர் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கினார். தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் தென்சென்னை அல்லது திருநெல்வேலி தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தமிழிசை தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழிசை சவுந்தரராஜனின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதலாக பொறுப்புகளை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.