அதிமுக பெயர், சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த நிரந்தர தடை விதித்தது உயர் நீதிமன்றம்

அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்கால கோரிக்கையைதான் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

நிலுவையில் உள்ள மூல வழக்கில், தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்த தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில்தான், கட்சியில் இருந்து சிலரை நான் நீக்கினேன். அதற்கு எனக்கு உரிமை உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள மூல வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டிருந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், ‘இடைக்கால கோரிக்கையை நிராகரிக்கும் போது மூல வழக்கை தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடுவது வழக்கமான நடைமுறைதான். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தவறு என எந்த நீதிமன்றமும் கூறவில்லை.

ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் தன்னை அழைத்துக் கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதைதான் எதிர்க்கிறோம். அவர் வேண்டும் என்றால், வேறு ஒரு கட்சியைத் தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என அழைத்துக்கொள்ளட்டும்’ என்று வாதிடப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி சதீஷ்குமார் இன்று தீர்ப்பளித்தார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு, அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டார்.