சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகள் தேர்தல் பணிகள் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதி முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. பறக்கும் படை சோதனை தொடங்கிவிட்டன.
இந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் சட்டத்துறை துணை செயலாளர் கே.சந்துரு, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா. வெங்கடேஷ் பாபு, பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியை சேர்ந்த வரதன், ஆம்ஆத்மி மாவட்ட தலைவர் பாரூக், சோபனா, வாசு உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கி கூறினார். தேர்தல் பிரசாரத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், வேட்பு மனு தாக்கலின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், பறக்கும் படை சோதனை, கண்காணிப்பு படை சோதனை பற்றி விளக்கங்கள் குறித்து விளக்கி கூறினார்.
கூட்டம் முடிந்ததும் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தேர்தல் வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினோம். 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அவர்களது செல்போன் எண்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பணப்பரிமாற்றம், தேர்தல் கூட்டம் அனுமதி பெறுதல், செய்யக் கூடியது, செய்யக் கூடாதது குறித்து விளக்க படம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
579 வாக்கு சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது. 974 இடங்களில் போலீஸ் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பணம் கொண்டு செல்வதற்கு உரிய ஆவணங்களை கையில் வைத்திருப்பது நல்லது. வியாபாரிகள் உரிய ஆவணங்களுடன் சென்றால் பறக்கும்படை விசாரணையில் இருந்து உடனே வெளியே வரலாம் என்று கூறினார்.