“மக்கள் சேவையாற்ற கட்சியில் சேர்ந்தேன், பதவியை எதிர்பார்த்து சேரவில்லை” – புதுச்சேரி பாஜகவில் இணைந்த முன்னாள் ஐஜி சந்திரன் பேட்டி

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி சந்திரன் பாஜகவில் இன்று இணைந்தார். மேலும், பதவியை எதிர்பார்த்து கட்சியில் சேரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

புதுச்சேரியின் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி சந்திரன் இன்று பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து கட்சியில் இணைந்தது தொடர்பாக சந்திரன் கூறியதாவது: “நாட்டு நலனும் மக்கள் நலனும் கொண்ட ஒரே கட்சி பாஜக. கடந்த 2014 முதல் நான் பணியில் இருந்தபோது ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் பணியும் ஆய்வுக்கு உட்கொள்ளப்பட்டு சேவை மக்களை சென்றடைய வழி செய்துள்ளனர். பொருளாதாரத்தில் நாடு உயர்ந்து வருகிறது.

சர்வீஸ் இருக்கும் போது உன்னிப்பாக கவனித்தேன். ஓய்வு பெற்ற பிறகு இக்கட்சியை தேர்வு செய்தேன். 34 ஆண்டுகள் பணியில் இருந்தேன். எஸ்பி, எஸ்எஸ்பி, டிஜஜி, ஐஜியாக புதுச்சேரியில் இருந்தேன். பதவியை எதிர்ப்பார்த்து கட்சியில் சேரவில்லை. மக்கள் சேவைக்காக சேர்ந்துள்ளேன்.

நாடு முழுவதும் பணியாற்றியுள்ளேன். புதுச்சேரி, அருணாசலபிரதேசம், மிசோரம், உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் பகுதியிகளில் பணியாற்றினேன். தேர்தல் பார்வையாளராக உ.பி, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினேன். பிஎச்டி படிப்புடன், காவல்துறை அனுபவம் உள்ளது.

காவல்துறை சிறிய துறை என்பதால் அதைதாண்டி மக்கள் சேவையாற்ற கட்சியில் சேர்ந்தேன். வாரிசு ஏதுமில்லாமல் சுய உழைப்பால் இருப்போர் இக்கட்சியில் அதிகம். தேர்தல் நேரத்தில் போட்டியிடும் காரணத்துக்காக இணையவில்லை. கட்சியை வலுப்படுத்தவே இணைந்தேன்” என்று தெரிவித்தார்.