மக்களவை தேர்தலில் மக்களை நம்பி களத்தில் இறங்குகிறோம் – திருமாவளவன் பேட்டி

தமிழ்நாட்டில் ஒரே கட்ட வாக்குப்பதிவு என்பது ஏதோ அரசியல் உள்ளீடு இருப்பதை அறிய முடிகிறது என்று திருமாவளவன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கடந்த முறையை போல இந்த முறையும் தமிழ்நாட்டில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது மராட்டியம், பீகார், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் 3 முதல் 7 கட்டம் வரை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது; ஆனால் தமிழ்நாட்டில் ஒரே கட்ட வாக்குப்பதிவு என்பது ஏதோ அரசியல் உள்ளீடு இருப்பதை அறிய முடிகிறது.

முதற்கட்ட வாக்குப்பதிவிற்கும் 7-ம் கட்ட வாக்குப்பதிவிற்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் 45 நாட்கள் இடைவெளி என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எதுவாக இருந்தாலும் மக்களை நம்பி களத்தில் இறங்குகிறோம்; மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வர வேண்டும்.

இந்த தேர்தல் நாட்டை பாதுகாக்கும் அரசியல் யுத்தத்தை சந்திக்கும் தேர்தல், எனவே வாக்காளர்கள் தான் நாட்டை காப்பாற்றியாக வேண்டும். தேர்தல் ஆணையத்தை நம்பி நாங்கள் களமிறங்கவில்லை. மக்களை நம்பி தான் களமிறங்குகிறோம். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 28 கட்சிகளும் பங்கேற்கின்றனர். மும்பையில் இருந்து வந்தவுடன் வி.சி.க. வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார்.