தி.மு.க. அரசு, மக்களுக்கு எதிராக உள்ளதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “நாளை கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணி, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறது. பிரதமரின் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் வருவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் வரலாம்.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நிறைய வதந்திகள் பரவி வருகிறது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுக்க முடியும். மத்திய பா.ஜ.க. அரசை அதானி, அம்பானி நடத்தி வருவதாக குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திர பட்டியலில் அவர்கள் பெயர் இல்லாதது ஏமாற்றம் அளித்திருக்கும்.
தி.மு.க. அரசு மக்களுக்கு எதிராக உள்ளது. சொத்துவரி, பத்திரப்பதிவு வரி உயர்வு என தாங்க முடியாத சுமையை மக்கள் மீது தி.மு.க. அரசு திணித்து வருகிறது. பிரதமரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 28 பைசா என விமர்சனம் செய்வதா. பிரதமரை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும்.” என்று வானதி சீனிவாசன் பேசினார்.