நிர்மலா சீதாராமனின் ஆணவ பேச்சு ஏழைகளை முன்னேற்றாது : அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி

“மானம் மறைக்க கந்தல் ஆடை இல்லாதவனை இழிவாக பார்ப்பவர்களுக்கு ஏழையின் வறுமை புரியாது. நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது” என மத்திய நிதியமைச்சர் சீதாராமன் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ‘பிச்சை’ எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். “வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ரூ.500, ரூ.1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை” என நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளதாவது; “பட்டினியை அனுபவித்தவனுக்குதான் பசியின் கொடுமை புரியும். வெயிலின் கொடுமையைப் பார்த்தவனுக்குதான் கூரையின் அருமை தெரியும். மானம் மறைக்க கந்தல் ஆடை இல்லாதவனை இழிவாக பார்ப்பவர்களுக்கு ஏழையின் வறுமை புரியாது.

நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது. வயிறார உணவு, ஒழுகாத கூரை வீடு, அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை அடிப்படை உரிமைகள் என்பதை தத்துவமாக கொண்ட சமதர்ம கொள்கையே திமுகவின் கொள்கை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.