அமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக் களரி ஏற்படும் : டிரம்ப் மிரட்டல்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே, அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நவம்பர் 5-ம் தேதியை (அதிபர் தேர்தல்) நினைவில் வைத்து கொள்ளுங்கள். அது நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தக்களறி ஏற்படும் என தெரிவித்தார்.

மெக்சிகோவில் கார்களை தயாரித்து அமெரிக்கர்களுக்கு விற்கும் சீனத் திட்டத்தை விமர்சித்தபோது அவர் இவ்வாறு கூறினார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தக் கார்களை அவர்களால் விற்க முடியாது. நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அது ஒட்டுமொத்த ரத்தக்களறியாக இருக்கும் என்றார்.

இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில், அவர் மற்றொரு ஜனவரி 6-ம் தேதியை விரும்புகிறார். அமெரிக்க மக்கள் இந்த நவம்பரில் அவருக்கு மற்றொரு தேர்தல் தோல்வியைக் கொடுக்கப் போகிறார்கள். ஏனெனில் மக்கள் அவரது பயங்கரவாதம், வன்முறை மீதான அவரது பாசம் மற்றும் பழிவாங்கும் தாகம் ஆகியவற்றை நிராகரித்து வருகின்றனர் என தெரிவித்தார்.