கறம்பக்குடி அருகே விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சாலைமறியல் பரபரப்பு

கறம்பக்குடி அருகே மழையூரில் நடைபெற்ற விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மாவட்ட செயலாளர் காயத்துடன் உயிர் தப்பினார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவனை மாற்று சமூகத்தினரால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், மழையூர் அரசு மருத்துவமனையில் சாலை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் எக்ஸ்ரே வசதி செய்து தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் மழையூர் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மர்ம நபர்கள் ஒலிபெருக்கியின் ஒயர்களை துண்டித்ததாக கூறப்படுகிறது. கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்ற நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி    மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விசிக மாவட்ட செயலாளர் இளமதி அசோகன்  மீது விழுந்தது. இதில் மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் அணிந்திருந்த சேலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எறிந்தது. இதைக் கண்ட விசிகவினர் தீயினை அனைத்தனர்.

பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபா்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர்  மழையூர் பேருந்து நிறுத்தம் முன்பு புதுக்கோட்டை, கறம்பக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பட்டியலின மக்கள் தாக்கப்பட்டு வருவதாகவும், இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது காவல்துறை அனுமதி பெற்று நடைபெற்றதாகவும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று தெரிவித்து தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடபட்டன.

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்று  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். நள்ளிரவு வரை நீடித்த சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த விசிக மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த மழையூர்  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.