சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நள்ளிரவு நேரத்தில் எப்பொழுதுமே குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயங்கின. பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்பாகவே புறப்படும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என்பது வதந்தி. சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர். வெள்ளிக்கிழமை வழக்கத்தை விட திருச்சிக்கு 70 பேருந்துகள் கூடுதலாகவே இயக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் சிலர் போராட்டம் நடத்தியது சந்தேகம் அளிக்கிறது. கிளாம்பாக்கத்திற்கு நள்ளிரவு வரும் பயணிகள் ஆய்வு செய்ய உள்ளோம். கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என உரிமையாளர்கள் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்” என்று கூறினார்.