புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக தொழுநோய் ஒழிப்பு தினம் தலைமை மருத்துவர் மு.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
டாக்டர் லதா முன்னிலை வகித்தார். வட்டார மருத்துமில்லா மேற்பார்வையாளர் ராம.ராமநாதன் வரவேற்று பேசினார். இதில் செவிலியர்கள் செல்வகுமாரி, சசிரேகா, கலைச்செல்வி, உமா, திவ்யா மற்றும் சிவசங்கரி, ஜெயலட்சுமி, திருமாவளவன், மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு உலக தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். டாக்டர் மு.பெரியசாமி பேசுகையில், மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமானது உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியா, பிலிப்பைன்ஸ, பிரேசில் போன்ற நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் உலகில் சுமார் 139,500 பேர் தொழுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 39.5% பெண்களும், 5% குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். உணர்ச்சியற்ற தேமல் இந்நொயின் அறிகுறியாக உள்ளது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பெரும் பாதிப்புகளை தடுக்கலாம், இல்லாவிட்டால் இந்நோய் கண், காது, மூக்கு பல் போன்ற உறுப்புகளையும், நரம்புகளை பாதித்து மாறாத ஊணங்களை கை, கால்களில் உண்டாக்கி உருவத்தை மாற்றிவிடுகிறது.
இந்நோய் காற்றின் மூலம் பரவுவதால், முகக்கவசம் போட்டுக்கொள்வதால் வராமல் தடுக்க முடியும். தொழுநோய்க்கு அரசு மருவத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முற்றிலும் இலவசமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன. உலக சகாதார நிறுவனம் இந்த வருட உறுதிமொழி தீர்மானமாக “தொழுநோயை விரட்டி அடிக்கவேண்டும்” என்ற வாசகத்தை முன்மொழிந்துள்ளது. ஆகவே அனைவரும் தொழுநோய் ஒழிக்க பாடுபடவேண்டும் என்று கூறினார். முடிவில் ஜான் நன்றி கூறினார்.