தேனி அருகே நடந்த கார் – சுற்றுலா வேன் விபத்தில் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு பகுதியில் இன்று அதிகாலை தேனி நோக்கி கேரளத்தைச் சேர்ந்த கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரே தேனியில் இருந்து ஏற்காடுக்கு சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. இரண்டு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் காரில் இருந்த கேரளமாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 3 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
ஒருவர் பலத்த காயத்துடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுற்றுலா வேனில் பயணித்த 18 பேர் பலத்த காயங்களுடன் வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் பயணித்த 4 நபர்களில் மூவர் இறந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் நினைவு இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இறந்தவர்கள் குறித்த விவரங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தேவதானப்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.