நெல்லையில் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் நீதிமன்ற வளாகம் : அசம்பாவிதங்கள் நடந்தால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் போலீஸாரின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் துப்பாக்கிச் சூடு நடத்த போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ள மதுரை உயர் நீதிமன்ற கிளை, காவல் துறை மற்றும் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்படும் என்று தமிழக காவல்துறை டிஜிபி அறிவித்தார்.

அதன்படி திருநெல்வேலியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் இன்று முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு நீதிமன்ற வளாகம் மட்டுமின்றி சுற்றுப்புறம் முழுக்க போலீஸாரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினுள் செல்லும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அனைவரும் உரிய சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதுபோல் வாகனங்களும் உரிய தணிக்கைக்கு பின்னரே நீதிமன்ற வளாகத்தினுள் அனுமதிக்கப்பட்டன.

நீதிமன்ற வளாகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் துறையினர் கூறியது: “திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா அறிவுறுத்தலின்படி, காவல் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆணையர் தலைமையில், துப்பாக்கியுடன் ஒரு காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள், 18 காவலர்கள், 3 ஆயுதம் ஏந்திய காவலர்கள் நீதிமன்ற வளாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நீதிமன்றம் அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 5 இருசக்கர ரோந்து வாகனங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாநகரில் ஏற்கெனவே இருக்கும் சோதனை சாவடிகளை தவிர்த்து, கூடுதலாக 6 வாகன சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் துப்பாக்கியுடன் கூடிய காவல் ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் கேமராவுடன் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடத்தில் பொதுமக்களுக்கோ அல்லது காவலர்களுக்கோ ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் காவலர்கள் துப்பாக்கியை உபயோகிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.