கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘செட்’ தகுதித் தேர்வை நடத்த டிஆர்பி-க்கு அனுமதி

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான செட் தகுதித்தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு (டிஆர்பி) அனுமதி அளித்து தமிழக உயர் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக உயர் கல்வித் துறை செயலர் கே.கோபால் வெளியிட்டுள்ள் அரசாணை விவரம்: தமிழக அரசு சார்பில் யுஜிசி வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, ‘செட்’ தகுதித் தேர்வை 2024-2025-ம் ஆண்டு முதல் 2026-2027 வரை (3 ஆண்டுகள்) நடத்தும் தேர்வு முகமையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தை நியமிக்க முடிவுசெய்துள்ளது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செட் தகுதித்தேர்வை நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியிருந்தது. இதைத்தொடர்ந்து, செட் தேர்வுக்கான அறிவிப்பை அப்பல்கலைக்கழகம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஏப்ரல் 1 முதல் 30 வரை பெற்றது.

தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதி கணினி வழியில் நடத்தப்படும் என அறிவித்து விண்ணப்பதாரர்களுக்கு ஹால்டிக்கெட்டையும் ஆன்லைனில் வெளியிட்டது. இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக, தொழில்நுட்பக் காரணங்களால் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தது. அதன்பிறகு செட் தேர்வு குறித்து கடந்த 6 மாதங்களுக்கான எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த சூழ்நிலையில், செட் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.