கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பக்த ஜனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான பழங்கால செப்பேடுகள் உள்ளிட்டவற்றை, பழைய பொருட்களை வாங்கும் கடையில் விற்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மதீனா துணை போனதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தம்பிரான் தோழர் என போற்றப்படுபவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். சமய குரவர்கள் நால்வரில் ஒருவர் அவர். அவர் பிறந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் தலமாகும். அந்த ஊரில் உள்ள அருள்மிகு பக்த ஜனேஸ்வரர் திருக்கோயிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு சுந்தரர் காலத்து பொருட்கள், செப்பேடுகள் மற்றும் கும்பாபிஷேகத்தில் உபயோகப்படுத்திய பொருட்கள், திருத்தேர் பாகங்கள் எல்லாவற்றையும் ஓர் அறையில் வைத்து உள்ளனர்.
இதனை உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் பழனிவேல் என்பவர் பழைய பொருட்கள் வாங்கும் காயிலான் கடையில் விற்றதை பார்த்த கிராம மக்கள் பொக்கிஷங்களை எடைக்கு போட்டவரை விரட்டி பிடித்ததில், இது இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் துணையுடன் நடந்த திருட்டு என்பது தெரிய வந்துள்ளது. அந்த சமயம் அங்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மதீனா, வாகனத்தை சிறைப்பிடித்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக காவல்துறையில் புகாரளிப்பேன் என்று பொதுமக்களை மிரட்டியுள்ளார்.
மேலும் தனது சாதியை கூறி அவமானப்படுத்தியதாகக் கூறி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உள்ளே தள்ளி விடுவேன் என்றும் பேசி திருட்டை கண்டுபிடித்த மக்களை பயமுறுத்தும் தொனியில் பேசியுள்ளார். திருட்டு சம்பந்தமாக ஊர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பில் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதனை மறைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மதீனா தங்களுக்குத் தெரியாமல் கோயில் பொருட்கள் திருடு போனதாக புகார் தெரிவித்துள்ளார்.
பட்டபகலில் வாகனத்தை கொண்டு வந்து கோவிலில் அறையை திறந்து திருடியதாக புகார் கொடுக்கிறார் என்றால் எத்தகைய நாடகம் இது. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும். கோவிலின் கட்டுப்பாட்டில் இருந்த அறையில் வைக்கப்பட்ட பொருட்களை எடுக்க பரிக்கல் கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு யார் அனுமதி கொடுத்தது என்பது குறித்து காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சுந்தரர் காலத்து செப்பேடுகள், பொருட்கள் விலை மதிப்பற்ற கால பொக்கிஷங்கள் அவை. இதனை காயாலன் கடையில் போடுவது என்பது திட்டமிட்டு கடத்துவதற்கு சமம். மேலும் சுந்தரர் வரலாற்றை அழிக்கும் நாத்திக அரசின் நயவஞ்சகமாக இருக்குமோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. கோயில் கும்பாபிஷேகம் என்பதே கோயிலின் விலையுயர்ந்த பொருட்களை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை களவாடி அழிக்கத்தானோ என பல சிவனடியார்கள் கேள்வி எழுப்பிவரும் நிலையில் இந்த திருட்டு சம்பவமானது மக்களையும் சந்தேகப்பட வைத்துள்ளது.
இந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி மதீனா மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்பே உள்ளன. அரசியல் செல்வாக்கால் உயர் அதிகாரிகளையே பந்தாடியவர் இவர் என்றும் கூறப்படுகிறது. மதீனா இதற்கு முன்பு பரிக்கல் கிராமத்து பெருமாள் கோயிலில் அதிகாரியாக இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மதீனா கும்பாபிஷேக நன்கொடை பெறுவதற்கு தனியார் வங்கியில் தனியாக கணக்கு துவக்கி மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது. அதனை விசாரிக்க வந்த மேலதிகாரியை மேலிடத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி மாற்றலாக செய்தார் என்றும் கூறப்படுகிறது.
இவரது கட்டுப்பாட்டில் 19 கோவில்கள் உள்ளன. அவற்றிலும் பல மோசடிகள் நடைபெறுவதாக பக்தர்கள் பேசி வருகின்றனர். இவற்றை எல்லாம் கண்டித்து, அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாவலூரில் பொதுமக்கள், பக்தர்கள், சிவனடியார்கள் இந்து முன்னணி தலைமையில் கண்களை, வாயை கருப்பு துணி அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இனியும் அரசு விழித்துக் கொள்ளாமல் மெத்தனமாக செயல்படக் கூடாது. தமிழக அரசும் காவல்துறையும் கோயிலின் பொக்கிஷமான செப்பேடுகள், அந்த காலத்து பொருட்களை திருடி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணைபோகும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீதும் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.