ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்

ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

மக்களவைத் தேர்தல், மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் தேர்தல்களை ஒரே காலகட்டத்தில் நடத்தி முடிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்த மசோதாவை பரிசீலிப்பது இந்த அவையின் சட்ட திறனுக்கு அப்பாற்பட்டது. அதைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, “ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கிறது. சட்டப்பிரிவு 82 மற்றும் துணைப்பிரிவு 5 அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது. உலகம் அழியும் வரை ஒரே கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது” என கூறி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். சிவசேனா (யுபிடி) எம்.பி. அனில் தேசாய் உள்ளிட்டோரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழு 90 நாட்களில் மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும். கூட்டுக்குழுவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் அங்கு இந்த மசோதா ஏற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மீது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படும்.