புதுச்சேரியில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு : முற்றுகையிட்டு மக்கள் ஆவேசம்

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். டி.என்.பாளையம் பகுதியில் மத்திய இணை செயலாளர் உள்ளிட்டோரை மக்கள் முற்றுகையிட்டு ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் கடந்த 30-ம் தேதி ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒரே நாளில் 48.4 செமீ மழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக புதுச்சேரி மாநிலம் நகரம் மற்றும் கிராமப்புறங்கள் வெள்ளக்காடாகின. அதே நேரத்தில் தமிழகத்தின் சாத்தனூர், வீடூர் அணைகளின் உபரி நீர்திறப்பால், புதுச்சேரி பகுதி தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பல கிராமங்கள் நீரில் மூழ்கியது. சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீரில் முழ்கி பயிர்கள் கடும் சேதத்துக்கு உள்ளானது. கனமழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்,

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதியாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மேலும் உடனடி நிவாரணமாக ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புயல் மழை தாக்குதலால் கடும் சேதத்துக்கு உள்ளாகியிருக்கும், புதுச்சேரிக்கு முதல்கட்டமாக ரூ.600 கோடி நிவாரண உதவியாக வழங்க வேண்டுமென பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் கடலூரில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று காலை ஆய்வு செய்தனர். அங்கு ஆய்வை முடித்த மத்தியக்குழு பிற்பகல் புதுச்சேரிக்கு வந்தது. முதலில் பாகூர் முள்ளோடையில் உள்ள துணைமின் நிலையம் வந்த உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் மின்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் புயல் மற்றும் மழை வெள்ளத்தின் போது முள்ளோடை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட மின் இயந்திரங்கள் பழுது உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

மேலும் புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் அளவிலான இந்த புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்து மத்திய குழுவினர் இரு பிரிவாக பிரிந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஒரு பிரவான உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா உள்ளிட்ட மத்திய குழுவினர் டி.என்.பாளையம் இருளர் குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக சென்று பார்த்தனர். அங்கிருந்து திரும்பி வரும்போது டி.என்.பாளையம் பேட் பகுதியைச் சேர்ந்த மக்கள் மத்திய குழுவினர் வந்த காரை வழிமறித்தனர்.

அப்போது இணை செயலாளர் ராஜேஷ் குப்தாவிடம் மழை வெள்ளத்தால் தங்களின் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் சேதமடைந்தன. மின்சாரமும் இல்லை. அரசும் தரப்பில் இருந்து வந்து எங்களுக்கு எந்தவித உதவிகளையும் செய்யவில்லை என்று தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து அவர் டி,என்.பாளையம் பேட் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டுவிட்டு அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகே புறப்பட வந்தார். அங்கு இணை செயலாளர் ராஜேஷ் குப்தா, தொகுதி எம்எல்ஏவும், பேரவைத் தலைவருமான செல்வம், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோரை மக்கள் முற்றுகையிட்டு ஆவேசமாக பேசினர்.

மல்லட்டாறை சுத்தம் செய்யாத காரணத்தால் மழைவெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்தது. வெள்ளம் புகுந்த நேரத்தில் அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள மாரியம்மன் கோயில் வீதி பகுதியை பார்வையிட வேண்டும் என்று கூறினர். ஆனால் மத்திய குழுவினர் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆனாலும் தொடர்ந்து மக்கள் அவர்களை மறித்து வைத்துக்கொண்டு வாக்குவாதத்தல் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரின் பாதுகாவலர் தடுத்த நிலையில், அவரிடமும் மக்கள் கோபமுடன் கடிந்துகொண்டனர். இதையடுத்து மத்திய குழுவினர் அங்குள்ள மலட்டாறு பகுதியை சேன்று பார்வையிட்டு அங்கிருந்து புறப்பட்டு பிற இடங்களுக்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மற்றொரு குழு கொம்மந்தான்மேடு தரப்பாலம் பகுதியில் ஆய்வு செய்தனர்.