இரண்டு நாள் இடைநிறுத்தத்துக்கு பின்பு 101 பேர் அடங்கிய விவசாயிகள் குழு ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி சலோ பேரணியை இன்று மீண்டும் தொடங்கினர். பேரணி தொடங்கிச் சென்ற சில மீட்டர் தூரத்திலேயே ஹரியானா போலீஸார் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. விவசாயிகளைக் கலைக்க போலீஸார் மீண்டும் கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தினர்.
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் டிராக்டர்களில் பஞ்சாப் – ஹரியானா இடையே அமைந்திருக்கும் ஷம்பு எல்லையைில் டிச.5ம் தேதி குவிந்தனர்.
தொடர்ந்து 101 விவசாயிகள் ஜோடியாக ஷம்பு பகுதியில் இருந்து டெல்லி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு ஜோடி பேரணியாக அணிவகுப்பை தொடங்குவார்கள் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தை டெல்லி அருகே ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய போலீஸார், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில் 6 விவசாயிகள் காயமடைந்தனர். இதனால் அந்த பேரணி பாதியில் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரண்டு நாட்கள் இடைநிறுத்தத்துக்கு பின்பு, டெல்லி சலோ ஜோடி பேரணியை இன்று விவசாயிகள் மீண்டும் தொடங்கினர். அப்பேரணி தொடங்கிச் சென்ற சில மீட்டர் தொலைவில் ஹரியானா போலீஸார் அதனைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. மோதலைத் தடுக்கும் வகையில் போலீஸார் மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளைக் கலைத்தனர்.
விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடர்வதற்கான அனுமதியை காட்டுமாறு ஹரியானா போலீஸார் கேட்டனர். இதனால் ஷம்பு எல்லையில் போலீஸார், விவசாயிகளுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், “போலீஸார் அடையாள அட்டைகளைக் காட்டுமாறு கேட்கின்றனர். அதேபோல் அவர்கள் எங்களை தொடர்ந்து டெல்லி அனுமதிப்பார்கள் என்ற உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும். ஆனால் டெல்லி செல்வதற்கு அனுமதி இல்லை என்று போலீஸார் கூறுகிறார்கள். பிறகு நாங்கள் ஏன் அடையாள அட்டைகளைக் காட்ட வேண்டும். எங்களை டெல்லி நோக்கிச் செல்வதற்கு அனுமதித்தால் நாங்கள் அடையாள அட்டைகளைக் காட்டுவோம்” என்றார்.
இதனிடையே போலீஸார் தரப்பில், விவசாயிகள் அவர்கள் சொன்ன 101 பேராக செல்வதற்கு பதிலாக கும்பலாக செல்வதற்கு முயற்சி செய்கின்றனர். அடையாள அட்டைகள் சரிபார்ப்புக்கு பின்னரே விவசாயிகள் மேலும் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றனர். அவர்கள் கூறுகையில், “நாங்கள் முதலில் அடையாளங்களை சரிபார்க்க வேண்டும். அதற்கு பின்பே அவர்களை முன்னேறிச்செல்ல அனுமதிக்க முடியும். எங்களிடம் 101 விவசாயிகளின் பெயர் பட்டியல் உள்ளது.
ஆனால் இந்த விவசாயிகள் பட்டியலில் உள்ளவர்கள் இல்லை. அவர்கள் எங்களைத் தங்களின் அடையாள அட்டையை சரிபார்க்க விடமால் கும்பலாக முன்னேறிச் செல்லப்பார்க்கிறார்கள்” என்றனர். விவசாயிகள் இதனை மறுத்துள்ளனர் அப்படி எந்த பட்டியலும் போலீஸாருக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
விவசாயிகள் தங்களின் பேரணிப் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப் ஹரியானா எல்லையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் எல்லையைக் கடப்பதைத் தடுக்கும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் எல்லைப் பகுதியில் 5 பேர்களுக்கு அதிகமானவர்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில், பிரிவு 163 (முன்பு பிரிவு 144) தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. ஷம்புவைத் தவிர பஞ்சாப் – ஹரியானா எல்லையான கனவுரியில் நான்கடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டு எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது.