புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இன்று துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக, உதவி உபகரணங்கள் வழங்குதல், உதவித் தொகைகள் வழங்குதல், மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு (UDID), சிறப்பு மருத்துவ முகாம்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு மற்றும் மறுவாழ்வு உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றையதினம் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா துவக்கி வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 16 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் உதவி உபகரணங்களையும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் உதவி உபகரணங்களையும் என மொத்தம் 31 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,91,600 மதிப்புடைய பல்வேறு உதவி உபகரணங்கள் இன்றையதினம் வழங்கப்பட்டது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்து வரும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளையும், இவ்விழாவினையொட்டி, பார்வைத்திறன் குறையுடையோர், செவித்திறன் குறையுடையோர் அரசு பள்ளிகள், ரெனேசான்ஸ், சீடு, வேர்டு தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இல்லங்கள்/சிறப்பு பள்ளிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு பரிசுகளையும் வழங்கி, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டப்பட்டது. எனவே தமிழ்நாடு முதலமைச்சரால் மாற்றுத்திறனாளிகளின் தேவையறிந்து பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதை, தொடர்புடைய அரசு அலுவலர்கள் விரைவாக மாற்றுத்திறனாளிகளிடம் கொண்டு சேர்த்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் எம்.லியாகத் அலி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.எஸ்.கலைவாணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.சா.ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் த.நந்தக்குமார், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் சு.ரவிசங்கர், தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பி.தெய்வாணை, வட்டாட்சியர் பரணி, முடநீக்கியியல் வல்லூநர் ச.ஜெகன் முருகன், மண்டல துணை வட்டாட்சியர் ஆ.லட்சுமணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.