குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக இன்று உதகை வந்தடைந்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து குடியரசுத் தலைவரை வரவேற்றார்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நான்கு நாள் பயணமாக விமான மூலம் கோவை வந்தார். நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு உதகையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் அவரது ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது. கோவையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் உதகை வந்தடைந்தார். ராஜ் பவன் வந்த குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
குடியரசுத் தலைவரை வரவேற்க தமிழக ஆளுநர் ரவி செவ்வாய்க்கிழமை இரவு உதகை வந்தார். இன்று உதகை ராஜ்பவனில் குடியரசுத் தலைவரே வரவேற்ற பின்னர் உடனடியாக சென்னை திரும்பினார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கார் மூலமாக குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வியாழக்கிழமை செல்கிறார். அங்கு போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகாரிகள் மத்தியில் பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் உதகை ராஜ்பவன் சென்று தங்குகிறார். 29-ம் தேதி உதகை ராஜ்பவனில் தங்கி ஓய்வெடுக்கும் அவர், 30-ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளம் செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேலம், ஈரோடு, திருப்பூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி, ராணுவ பயிற்சி மையம், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம், உதகை ராஜ்பவன் மாளிகை, திட்டுக்கல்-ராஜ்பவன் மாளிகை சாலை, உதகை-குன்னூர் சாலை, குன்னூர் வெலிங்டன் ராணுவ வைக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.