அதானியை கைது செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ் : சோரோஸின் திரைக்கதை என பாஜக சாடல்

தொழிலதிபர் கவுதம் அதானி மீதனான குற்றச்சாட்டு தொடர்பாக அவரை கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், இது ‘சோரோஸின் திரைக்கதை’ என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தொழிலதிபர் அதானியின் பெயர் இடம்பெறவில்லை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ள நிலையில், இன்று அதானி விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் இடையே நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கருத்து மோதல் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தின் பிற அலுவல்களை ஒத்துவைத்து விட்டு, அதானி விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று பல எதிர்க்கட்சித் தலைவர்கள் நோட்டீஸ் அளித்து அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, அதானி கைது செய்யப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். அவர் கூறுகையில், “இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி ஏற்றுக்கொள்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக அவர் மறுக்கத்தான் போகிறார். அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. ஆயிரம் கோடிகள் மோசடிகளுக்காக அதானி அமெரிக்காவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருக்க வேண்டும். அரசு அவரைப் பாதுகாக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் தாக்குதலுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன், அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸின் திரைக்கதையை இங்கு அரங்கேற்ற காங்கிரஸ் முயல்கிறது என்று குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பேசிய அவர், “இது காங்கிரஸின் குற்றச்சாட்டு இல்லை, மாறாக ஜார்ஜ் சோரஸின் திரைக்கதை இங்கு அங்கேற்றப்படுகிறது. இந்த வழக்கு சோரோஸின் நிதியுதவியால் அரங்கேற்றப்படுகிறது என்பதை அமெரிக்க நிர்வாகமும் அறிந்தே உள்ளது. இந்தியாவை, நாட்டுக்கு வெளியே பொருளாதார ரீதியாக தாக்கும் ஒரு திரைக்கதையே இது.

காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றால் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யட்டும். அவர்களுக்கு சட்டப்பூர்வ வழிமுறை இருக்கிறது தானே. அது தொடர்பாக விசாரணை நடைபெறும். அதற்கு பின்பு அவர்கள் செல்வது தவறு என்றும் சோரோஸுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பும் அம்பலமாகும்” என்று தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்த அமெரிக்க தொழிலதிபர் சோரோஸுடன் காங்கிரஸ் கட்சியை இணைத்து பாஜக பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளது.