புதுவை மாநிலத்தில் ரேஷன் கடைகளில் வரும் டிசம்பரில் நிச்சயம் பைகளில் அடைக்கப்பட்ட அரிசி விநியோகிக்கப் படும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர் கூறியதாவது: “புதுச்சேரியில் மழையால் பெரிய பாதிப்பில்லை. காரைக்காலில் பலத்த மழை பெய்து வருவதாக தகவல் வந்துள்ளது. மழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகள் மூலம் பைகளில் அடைக்கப்பட்ட அரிசி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் நிறைவடைந்து சம்பந்தப்பட்ட கோப்பு துணை நிலை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆகவே, நிச்சயமாக வரும் டிசம்பரில் அரிசி விநியோகம் இருக்கும்” என்றார்.
புயல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக கேட்டதற்கு, பதிலளித்த முதல்வர் கூறுகையில், “இயற்கை சீற்றம் வரும்போது ஏற்படும் சூழலை சமாளிக்க அரசு நிர்வாகம் தயாராக இருக்கிறது. அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கடலோர பகுதி என்பதால், மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான உதவி செய்யப்படும். மழையால் காரைக்கால் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக எம்எல்ஏக்கள் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர். பாதிப்பை பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.