புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இந்திய அரசமைப்பு உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்திய அரசமைப்பு உறுதிமொழியான ‘இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச்சார்பின்மையும் மக்களாட்சிமுறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு, நாட்டுமக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்.” என்ற உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அதனை பின்தொடர்ந்து, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ச.ஞானம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.ஸ்ரீதர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.