புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், புதிய மின்மாற்றிகளை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று துவக்கி வைத்தார்.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி, சுகாதார வசதி, மின் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் பொன்னமராவதி மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், புதிய மின்மாற்றிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், தூத்தூர் ஊராட்சி, மணப்பட்டி கிராமத்திலும், காட்டுப்பட்டி ஊராட்சி, யுவன் சங்கர் நகர் கிராமத்திலும் மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியம், விராச்சிலை ஊராட்சி, மேலகட்டம் கிராமத்திலும், மேலூர் ஊராட்சி, கரையாம்பட்டி கிராமத்திலும் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகள் திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், வணிக நிறுவனங்களுக்கு நிறைவான மின்விநியோகம் வழங்கப்படும்.
எனவே, தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வினை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அ.அக்பர்அலி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், செயற்பொறியாளர் (மின்சார வாரியம்) எம்.ஆனந்தாய், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.