தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து காரில் திருச்செந்தூர் வந்தார்.
தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு, கோவிலில் தெய்வானை யானை கட்டப்பட்டு இருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு யானையால் தாக்கப்பட்டு யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்த இடத்தையும், தெய்வானை யானையையும் அவர் பார்வையிட்டார். பின்னர் தெய்வானை யானைக்கு கரும்பு கொடுத்தார். அதை தெய்வானை யானை வாங்கி சாப்பிட்டது.
அதன்பிறகு அவர் கோவிலுக்கு சென்று சுவாமி மூலவர் மற்றும் சண்முகர் சன்னதியில் தரிசனம் செய்தார். பின்னர் திருச்செந்தூர் புளியடி தெருவில் உள்ள உயிரிழந்த யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்று முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் யானை பாகன் உதயகுமார், சிசுபாலன் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அப்போது அமைச்சர் சேகர் பாபுவுடன் கோவில் தக்கார் அருள் முருகன், இந்து சமய அறநிலைய முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், வன கால்நடை மருத்துவர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி, திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.