டெல்லியில் இருந்து மத்திய அரசின் 16-வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில், செயலர் ரிவத்விக் பாண்டே, உறுப்பினர்கள் அன்னி ஜார்ஜ், அஜய் நாராயன்ஜா, மனோஜ் பாண்டே, அன்னி ஜார்ஜ் மேத்யு, சவும்யா கண்டி கோஷ், உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் 4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளனர்.
அடுத்த 5 ஆண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி வருவாய் திட்டம் எப்படி இருக்க வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், என்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் அதற்கான தரவுகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று இந்த நிதிக்குழு சேகரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் இயங்கிவரும் 15 கோடி லிட்டர் கொள்ளளவு, கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை குழுவினர் ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள், உற்பத்தி, பாது பயன்பாடு, வருவாய் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை அதிகாரிகளிடம் கேட்டரிந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- தமிழ்நாட்டை பொறுத்தவரை 9-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழ்நாட்டிற்கு, 7.931 சதவீத மாக இருந்த நிதி பகிர்வு, 15-வது நிதிக்குழுவால், 4.079 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால், 3.57 லட்சம் கோடி ரூபாய் வரை தமிழ்நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசுக்கான நிதி பகிர்வை அதிகரிக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில், 16-வது நிதிக் குழுவிடம் வலியுறுத்தப்பட உள்ளது. அரசின் தேவைகளை எடுத்துரைத்து நிதி பெறும் பணி, வணிக வரித்துறை செயலர் பரதேஜந்திர நவ்னீத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தும் 16-வது நிதிக்குழு, தன் பரிந்துரைகளை, அடுத்த ஆண்டு அக்.31-க்குள் சமர்ப்பிக்கும். இக்குழு பரிந்துரைப்படி, 2026 ஏப்.1 முதல், தமிழ்நாடு நிதியை பெற துவங்கும் என்று அவர்கள் கூறினர்.
ஆய்வின் போது குடிநீர் வடிகால் வாரிய முதன்மை செயலர் கார்த்திகேயன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், எஸ்.பி. சாய்பிரனீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஏற்றுமதி தொழில் சார்ந்த நிறுவனங்களை பார்வையிட சென்றனர்.