முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள், இருவர் விடுதலை – மதுரை கோர்ட் தீர்ப்பு

சென்னையில் நடந்த முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கார்த்திக் மற்றும் ஆனந்த் ஆகியோரை விடுதலை செய்தும் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை சேர்ந்த மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர் தலித் ஏழுமலையின் மருமகன் வழக்கறிஞர் காமராஜ். இவர் சமீபத்தில் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர். இந்நிலையில் சென்னை ஒட்டேரியில் அடுக்குமாடி குடியுருப்பில் வைத்து கடந்த 2014ல் காமராஜ் படுகொலை செய்பட்டார். இக்கொலை தொடர்பாக சென்னை கொரட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றி உத்திரவட்டது. மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை விரைந்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கக்கோரி 2021-ம் ஆண்டில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள கொலை வழக்கை விரைவில் முடிக்க கோரி கொல்லப்பட்ட காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நவ.19ம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த வழக்கில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவகடாட்சம் இன்று தீர்ப்பளித்தார். கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கார்த்திக் மற்றும் ஆனந்த் ஆகியோரை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.