“ஆட்சி சிறப்பாக உள்ளது என மக்கள் பாராட்ட வேண்டும்” – சீமான் சாடல்

“ஆட்சியாளர் தன்னுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கூறினால், அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும், மக்களும், ஏடும் போற்ற வேண்டும். இந்த தலைவனின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் முதல்வரை பார்க்க வருவதில்லை. வரவழைக்கப்படுகின்றனர்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என்று சொல்வதாக கூறிவருகிறார். என்னுடன் ஒருமுறை வாருங்கள். நானும் ஆய்வுக்குப் போகிறேன். இந்த மனுக்களைக் கொடுத்துவிட்டு, கவலை, கண்ணீரோடு மக்கள் கதறுவதை ஒருமுறை கேளுங்கள்.

ஆட்சியாளர் தன்னுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கூறினால், அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். ஆட்சியைப் பற்றி மக்கள் சொல்ல வேண்டும். நாடும், மக்களும், ஏடும் போற்ற வேண்டும். ஏடு போற்றும், வாடகை வாய்கள் பேசும். காரணம் ஆட்சியாளர்களே அனைத்தையும் வைத்துள்ளதால் பேசும். திமுக அரசின் ஊடகங்கள் போற்றுகிறது ஆனால், மக்கள் தூற்றுகிறார்கள்.

காசு கொடுத்து மக்களை அழைத்துவந்து சாலையின் இருபுறங்களிலும் மக்களை நிறுத்திவைக்கின்றனர். மக்கள் அவர்களாக வருவதில்லை. இந்த தலைவனின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் முதல்வரை பார்க்க வருவதில்லை. வரவழைக்கப்படுகின்றனர்.

நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அதற்கான வேலைகள் நடக்கிறது. 2026-ல் நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். அதில் 117 பெண்கள், 117 ஆண்ளுக்கு வாய்ப்புக் கொடுப்போம். நூறு இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்க இருக்கிறோம். கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமம் என்ற கோட்பாட்டைக் கொண்டவன் நான் என்று சீமான் கூறினார்.