கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமத்துக்கு உள்ளாகாமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்திருக்கிறது. அதன்படி அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை என தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சபரிமலை யாத்திரை வரக்கூடிய பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தேவசம் போர்டு வெளியிட்டிருக்கிறது.
அதில் கூறியிருப்பதாவது:- சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாத்திரையின்போது மயக்கம் அடைந்தால், பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ உதவியை பெற தாமதிக்க வேண்டாம். யாத்திரையின்போது தவறாமல் பயன்படுத்தப்படும் மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும். பக்தர்கள் ஏற்கனவே ஏதேனும் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால், பயணத்தின்போது உரிய மருந்துகள் மற்றும் மருந்துச் சீட்டுகளை உங்களுடன் வைத்திருக்கவும்.
சபரிமலைக்கு ஒரே நேரத்தில் நடந்து செல்வது சிரமமாக இருக்கும். எனவே யாத்திரை செல்லும் முன் நடைபயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகளை பக்தர்கள் மேற்கொள்வது நல்லது. உங்களுக்கு உடல் தகுதி இல்லையென்றால் மெதுவாக மலை ஏறுங்கள். தேவையான இடங்களில் நின்று ஓய்வெடுக்கவும். நீலிமலை பாதைக்கு பதிலாக சுவாமி ஐயப்பன் சாலையை தேர்வு செய்வது நல்லது. சாப்பிட்ட உடன் மலை ஏறக்கூடாது.
நீலிமலை, பம்பை, அப்பாச்சிமேடு மற்றும் சன்னிதானத்தில் செயல்படும் மருத்துமனைகள் இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் போன்ற சேவைகளையும் வழங்குகின்றன. யாரையேனும் பாம்பு கடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சபரிமலையில் உள்ள சுகாதார மையங்களிலும் ஆன்டிவென் மற்றும் சிகிச்சைகள் கிடைக்கும்.
யாத்திரையின்போது வெதுவெதுப்பான நீரை மட்டுமே அருந்த வேண்டும். உணவை கையாளும் முன் கைகளை நன்றாக கழுவவும். மூடி வைக்காத உணவை உண்ணக்கூடாது. பொது இடங்களில் மலம் கழிக்க வேண்டாம். கழிப்பறைகளை பயன்படுத்துங்கள். பின்னர் சோப்பை பயன்படுத்தி கைகளை நன்கு கழுவவும் என்று கூறப்பட்டிருக்கிறது.